articles

img

மெகா செல்வந்தர்கள் மீது வரி காலத்தின் கட்டாயம்-க.கனகராஜ்

பெரும் பணக்காரர்கள் மீதான செல்வ வரி மற்றும் மெகா கோடீஸ்வரர்கள் தமது முன்னோரிடம் இருந்து பெறும் செல்வங்கள் மீதான மூதாதையர் சொத்து வரி உள்ளிட்டவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையிலும் பெரும் பணக்காரர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் லாபத்தின் மீதான வரிகளை அதிகரிக்க வேண்டும்; பெரும் பணக்காரர்களின் சொத்துக்களின் மீதான வரியை மீண்டும் கொண்டு வர வேண்டும்; வாரிசுகளுக்கு கிடைக்கும் மூதாதையர் சொத்து மீது வரி விதிக்கப்பட வேண்டும்; நீண்ட கால பங்குச் சந்தை சம்பாத்தியங்களின் மீது மீண்டும் வரி விதித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கிறது. 

நரேந்திர மோடியும், பாஜகவினரும் சொல்வது போல இந்துக்களிடம் பறித்து, இஸ்லாமியர்களிடம் கொடுப்பதல்ல ‘மறு விநியோகம்’. மாறாக, ஏழை எளிய மக்களுக்காக பெரும் செல்வம் உடையவர்கள், பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நிலப் பிரபுக்களிடம் வரி விதித்து அதை ஏழ்மையின் பிடியிலும், வறுமையிலும், வேலையின்மையிலும் உழலும் மக்களுக்காகவும் பொதுவான நன்மைக்கா கவும் செலவிடுவதே மறு விநியோகம், மறு பங்கீடு எனப் பொருள்படும்.

மூதாதையர் சொத்து மீதான வரி

செல்வ வரி என்று கோரிக்கை வைத்தவுடனே, சாதா ரண மக்களிடம் வரி போடப்போவதாக பீதியைக் கிளப்பி விடுகிறார்கள் சங்பரிவாரக் கும்பல்கள். ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளவர்க ளிடம் ஆண்டுக்கு இரண்டு சதவிகிதம் வரி வசூ லிப்பதுதான் இதன் பொருள். இந்த வரி விகிதத்தை பல்வேறு நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன. 

அதேபோன்று பெரும் சொத்து படைத்தவர்கள் - அதாவது, ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்து படைத்தவர்கள் தங்கள் இறப்பிற்கு முன்னதாகவோ, இறந்தபிறகோ வாரிசுகளின் பெயருக்கு மாற்றப்படும் போது அதன் மீது வரி விதிப்பது. 

இத்தகைய வரிகள் முதலாம் உலகப் போருக்குப் பின்னர் பல்வேறு நாடுகளிலும் ஏற்றத்தாழ்வை சரி செய்வதற்காக விதிக்கப்பட்டன. உதாரணமாக, ஜப்பானில் 55 சதவிகிதம், தென்கொரியாவில் 50 சதவிகிதம், பிரான்சில் 45 சதவிகிதம், இங்கிலாந் தில் 40 சதவிகிதம், ஸ்பெயினில் 34 சதவிகிதம்,  அயர்லாந்தில் 33 சதவிகிதம், பெல்ஜியத்தில் 30 சத விகிதம், ஜெர்மனியில் 30 சதவிகிதம், சிலியில் 25 சத விகிதம் என மூதாதையர் சொத்துக்கள் மீது விதிக்கப் பட்டு இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன. இது ஆண்டுதோறும் விதிக்கப்படுவதில்லை. எப்போது வாரிசுகளுக்கு சொத்து கைமாறுகிறதோ அப்போது மட்டுமே விதிக்கப்படுகிறது. ஒரு தலைமுறை கழித்துத் தான் இந்த வரிவிதிப்பு வரும் என்பதால் 20 ஆண்டு களுக்கு ஒருமுறை இது வசூலிக்கப்படக் கூடும். 

இத்தகைய வரிகள் விதிக்க வேண்டிய அவசியம் என்ன?

உண்மையில், இந்தியாவில் இப்போது வருவாய் மற்றும் சொத்து இடைவெளி மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் தனிநபர்களின் மொத்த சொத்து 2019 கணக்கின்படி ரூ.945 லட்சம் கோடி. இதில் உயர் அடுக்கில் உள்ள ஒரு சதவிகி தம் பேரிடம் மட்டும் 40 சதவிகிதம் சொத்துக்கள் உள்ளன. உயர் அடுக்கில் உள்ள 10 சதவிகிதம் பேரின் சொத்து மதிப்பு 65 சதவிகிதம். ஆனால், கீழ்மட்டத் தில் உள்ள 60 சதவிகிதம் பேரிடம் உள்ள சொத்து  மதிப்பு வெறும் 4.7 சதவிகிதம் மட்டுமே. அதாவது, மேலே உள்ள ஒரு சதவிகிதம் பேரிடம் உள்ள சொத்தில் ஏறத்தாழ 10ல் ஒரு பகுதிதான் கீழ டுக்கில் உள்ள 60 சதவிகிதம் பேரிடம் உள்ளது. இதே போன்று உயரடுக்கில் உள்ள 10 சதவிகிதம் பேரின் வருமானம் மொத்த வருமானத்தில் 57 சதவிகிதம் ஆகும். இதில் மீதமுள்ள 90 சதவிகிதம் பேரும் 43 சதவிகிதத்தையே பகிர்ந்து கொள்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள 10 சதவிகிதம் பேரின் வருவாய் விகிதம் இன்னும் குறைவாகவே இருக்கும். எனவே, இந்த ஏற்றத்தாழ்வுகளை ஓரளவு குறைப்பதற்கு அரசு, கீழ் தட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 

அரசியல் சட்ட வழிகாட்டுதல்

இதற்கு ஏன் பெரும் கோடீஸ்வரர்கள் என்ற தனி நபர்களின் சொத்தில் வரி விதித்து எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழலாம். முதலாவதாக, அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பகுதி 4 பிரிவு 39 உபபிரிவு பி, சி. ஆகியவை கீழ்க்கண்டவாறு வலி யுறுத்துகின்றன:

“மக்களுக்கு பொதுவான நன்மை வழங்கக் கூடிய வகையில் வளங்களின் மீதான கட்டுப்பாடும் உரி மையும் இருக்க வேண்டும். அதேபோன்று, பொது வான மக்களின் நலனுக்கு பாதகமான வகையில் சொத்தும், உற்பத்தி சாதனங்களும் குவியாத வகை யில் பொருளாதார அமைப்பு முறையின் இயக்கம் இருக்க வேண்டும்”.

செல்வக்குவிப்பு அதிகரிப்பு

இரண்டாவதாக, செல்வம் படைத்த இப்பகுதியி னரும் அரசின் நடவடிக்கைகளின் மூலம் வரி வருவா யிலிருந்தும் நாட்டின் சொத்துக்களிலிருந்தும் ஏராள மான சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டின் இடைக் காலம் வரை 17.46 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளு படி செய்யப்பட்டிருக்கிறது. 

நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்போர் எண்ணிக்கை 2014ல் 28 ஆக இருந்து 2020ல் 102 ஆக உயர்ந்து, 2023ல் 169 ஆக அதிகரித்திருக்கிறது.  இவை தவிர, பெரு நிறுவனங்க ளுக்கான வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகித மாக குறைக்கப்பட்டது. அப்படி குறைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டு மட்டும், இதனால் அரசுக்கு இழப்பு 1.87 லட்சம் கோடி. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால், இந்த 5 ஆண்டுக ளில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் விட்டுக்கொடுக்கப் பட்டுள்ளது. சொத்துவரி 2015 ஆம் ஆண்டிலிருந்து கைவிடப்பட்டுவிட்டது. இதேபோன்று வருமான வரியில் உயர் அடுக்கில் உள்ளவர்களுக்கு சலுகை தரப்பட்டது. 

கூட்டுக் களவாணிகள்

அரசு கடைப்பிடித்து வரும் ‘கூட்டுக்களவாணி’ முதலாளித்துவத்தால் ஒரு பகுதி பெருமுதலாளிகள் மிகப்பெரிய அளவிற்கு அரசின் பொதுச் சொத்துக் களை அபகரிப்பதற்கு சட்டப்படியாகவே ஏற்பாடு கள் செய்யப்பட்டன. உதாரணத்திற்கு குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது அதா னிக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் வெறும் ஒரு ரூபாயிலி ருந்து 32 ரூபாய் வரை பேரம் செய்யப்பட்டது. அதேசம யம் அதே ஒரு சதுர மீட்டர் நிலம் டாட்டா நிறுவனத்தி ற்கு 900 ரூபாய்க்கும், போர்டு இந்தியாவுக்கு 1100 ரூபாய்க்கும், டோரண்ட் பவர் நிறுவனத்திற்கு 6000 ரூபாய்க்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்கள். 

ஏழைகளிடம் கொடிய சுரண்டல்

ஆனால், இந்தியாவில் ஏழை எளிய மக்களிடமி ருந்து தாறுமாறாக பணம் சுரண்டப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் கூடுதல் வரிகளின் மூலமாக மட்டும் 2014-15 முதல் 2023-24க்கும் இடையே 28.33 லட்சம்  கோடி ரூபாய் மக்களின் பைகளில் இருந்து அர சாங்கம் எடுத்துக் கொண்டது. 410 ரூபாய்க்கு விற்கப் பட்ட சமையல் எரிவாயுவின் விலை 1200ஐ தொட்டது. 2014ல் இருந்த நிலையிலேயே கிட்டத்தட்ட சராசரி உண்மை ஊதியம் 2024லும் நீடிக்கிறது. இதனால் வீடுகளில் மின்சார நுகர்வு குறைந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி 47 வருடங்களில் இல்லாத அளவிற்கு வீட்டுச் சேமிப்புகள் குறைந்திருக்கிறது. இதனால், குடும்பங்கள் கடன்களுக்குள் தள்ளப் பட்டு கடன் வாங்குவது அதிகரித்திருக்கிறது. முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்ப்பு கள் குறைந்துள்ளன. 

15லிருந்து 49 வயதுடைய பெண்களிடம் இரத்த சோகை விகிதம் 2015-16ல் 53 சதவிகிதமாக இருந்தது. இது 2019-21ல் 58 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஊட்டச்சத்து குறைவின் காரணமாக இது ஏற்பட்டி ருக்கிறது. 

இன்னொரு பக்கம் பார்த்தால் உலக வங்கியின் விபரப்படி இந்தியாவில் இப்போதும் சுமார் 19 கோ டிப் பேர் ஒவ்வொரு நாள் இரவிலும் வெறும் வயிற்றோடு தூங்கச் செல்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 11 சதவிகிதம் பேர் இன்னும் ஏழ்மை நிலை யிலேயே இந்தியாவில் இருக்கிறார்கள். இதன் உச்சம் தான் பட்டினிக் குறியீட்டில் 125 நாடுகள் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் இருப்பதாகும்.  போது மான ஊட்டச்சத்து இல்லாதவர்கள் இந்திய மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்குக்கும் அதிகமாக (35.5 சத விகிதம்) இருக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 17 சதவிகிதம் பேர் அவர்கள் வயதுக்கு உரிய உயரத்தோடு இல்லை. 18.7 சதவிகிதம் பேர் வயதுக்கு தகுந்த எடையோடு இல்லை.

எனவே, ஒருபக்கம் குமட்டும் அளவிற்கு செல்வங் கள், வளங்கள், சொத்துக்கள் ஓரிடத்தில் குவிவதும், மற்றொருபுறம் மக்கள் ஏழ்மையிலும் பட்டினியிலும் உழல்வதும் ஒரு நாட்டிற்கு பெருமையான விஷயம் அல்ல. எனவேதான், இவற்றை கருத்தில் கொண்டு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

மக்கள் நல அரசு என்றால்...

இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டு மென்றால் ஒரு மக்கள் நல அரசு கீழ்க்கண்ட 5 அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1.கடைக்கோடியில் உள்ள மனிதனுக்கும் கட்டுப்
படியான விலையில் உணவு
2.வேலை அல்லது வேலையில்லாக் கால நிவாரணம்
3.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி
4.எல்லாக் காலத்திலும் இலவச மருத்துவம்
5. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வ
தற்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அல்லது வாழ்வாதார உதவி

இதைச் சொன்னவுடன் இதற்கெல்லாம் பணத்தி ற்கு எங்கு போவது என்று பெரு முதலாளிக்கும் தங்கள் ஆதரவு அறிவுஜீவிகள் மூலம் கூக்குரல் இடு வார்கள். நடுநிலை வேடம் போடுவோரும் அதை ஆமோ திப்பார்கள். எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்க்கண்ட அம்சங்களை அரசு நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கைகளை வைக்கிறது.

1.பெரு நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை பழைய 30 சதவிகித அளவிற்கே உயர்த்த வேண்டும்.இதன் மூலம் உத்தேசமாக ரூ.2 லட்சம் முதல்2.5 லட்சம் கோடி கிடைக்கும்.

2.சொத்து வரியை மீண்டும் கொண்டு வர வேண்டும். 2019 கணக்குப்படி மொத்த தனியார் சொத்துசுமார் 945 லட்சம் கோடி. தற்போது அது 1000 லட்சம்கோடியை தாண்டியிருக்கும். இதில் உயர்தட்டில் உள்ள ஒரு சதவிகிதத்தினரின் சொத்து மதிப்பு சுமார் 45 லட்சம் கோடியாக இருக்கும். இந்த சொத்துக்களின் மீது இரண்டு சதவிகிதம் அளவிற்கு வரிவிதித்தாலே 9 லட்சம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

3.வாரிசுகளுக்கு கிடைக்கப் பெற்ற மூதாதையர் சொத்து மீதான வரியை விதிக்க வேண்டும். ரூ.100கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளவர்கள் ஆண்டுக்கு 5 சதவிகிதம் பேர் உயில் மூலமாகவோ, பத்திரங்கள் மூலமாகவோ மாற்றிக் கொடுக்கிறார்கள் என்றால் அதன் மீது 3ல் ஒரு பகுதிவரி விதித்தாலே கூடசுமார் 7 லட்சம் கோடி கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

4. இதேபோன்று, நீண்ட கால பங்குச் சந்தை வணிக லாபத்தின் மீது விதிக்கப்பட்ட வரியை மீண்டும் கொண்டு வந்தால் அதுவும் கணிசமான அளவிற்குஅரசுக்கு நிதியை கொண்டு வரும்.

இவையெல்லாம் சேர்ந்தால் ரூபாய் 20 லட்சம் கோடி அளவிற்கு கூடுதல் வருவாயை அரசு திரட்ட முடியும். இந்த தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 சதவிகிதம் அள விற்கு வரும். ஏற்கனவே, மேற்கண்ட இனங்களுக்காக செலவழிக்கப்படும் தொகையையும் சேர்த்தால் மேலே சொன்ன ஒரு மக்கள் நல அரசு நிறை வேற்ற வேண்டிய ஐந்து கடமைகளையும் நிறை வேற்ற முடியும்.

முதலாளித்துவக் கட்சிகள் நிச்சயம் இவற்றை முன்வைக்கப் போவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக ளும், இடதுசாரி அமைப்புகளும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வர்க்க அமைப்புகளும், வேலை தேடும் இளைஞர்களும் ஒன்று திரண்டு இந்த கோரிக்கை யை முன்வைப்பது இந்த காலத்தின் கட்டாயமாகும்.

2019 கணக்குப்படி மொத்த தனியார் சொத்து சுமார் 945 லட்சம் கோடி. தற்போது அது 1000 லட்சம் கோடியை தாண்டியிருக்கும். இதில் உயர்தட்டில் உள்ள ஒரு சதவிகிதத்தினரின் சொத்து மதிப்பு சுமார் 45 லட்சம் கோடியாக இருக்கும். இந்த சொத்துக்களின் மீது இரண்டு சதவிகிதம் அளவிற்கு வரி விதித்தாலே 9 லட்சம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

க.கனகராஜ் 
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)









 

;